வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்த தோழிகள்!!

இன்று மாலை, எனக்கு மிகவும் பிடித்ததாய் இருந்தது.  ஆபீஸ் விட்டு வந்தவுடனேயே, என் இரு பிள்ளைகளும் பள்ளியிலிருந்து வந்தனர்.  அவர்கள் மிகவும் பசியுடன் இருந்ததால், அவர்களுக்கு மாலை சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது, என் இணை பிரியா தோழி விஜியிடமிருந்து போன் வந்தது.  அவளை நான் என் வீட்டிற்கு அருகிலிருந்த தையலகத்திற்கு என்றாவது அழைத்துப் போவதாகக் கூறியிருந்தேன்.  அவளுக்கு இன்று நேரம் அமைந்ததால் என் வீட்டிற்கு வருவதாகக் கூறினாள்.

எனக்கு பயங்கர சந்தோஷம்!! அவளைப் பார்த்து பேசப் போகிறோம் என்பதே எனக்குள் ஆவலைத் தூண்டியது.  விஜி வந்தசவுடன், தையலகத்திற்குச் சென்று, அவளுக்கு ஒரு சுடிதார் தைக்கக் கொடுத்துவிட்டு, என் வீட்டிற்கு வந்து சில நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  ரொம்ப நாளைக்கப்புறம் நாங்கள் இருவரும் மட்டும் பேசுவது இருவருக்குமே பழைய ஞாபகங்களை வரவழைத்தன.

பேசப் பேச பல விஷயங்கள். நான் சொல்ல, விஜி ரசிக்க, அவள், தன் செல்ல மகள் ரக்க்ஷனாவின் குட்டிக் குட்டி குறும்புகளைச் சொல்ல, நேரம் பறந்தோடியது.

மீண்டும் ஒரு முறை, சிறகடித்துப் பறக்கும் கல்லூரித் தோழிகளாகி விடமாட்டோமா! என்ற ஏக்கம் இருவருக்குமே!

சற்று நேரம் பேசிவிட்டு விஜி சென்றது, மயிலிறகாய் என் மனத்தை வருடுகிறது……

Advertisements

விஜி ஆன்ட்டியும் ப்ரைட் ரைசும் – சூப்பர் காம்போ!!

பிப்ரவரி 10, 2010. விஜி-ராம் தம்பதியரின் இரட்டையர்கள் ரக்க்ஷித்-ரக்க்ஷனா ஆகியோரின் மூன்றாவது பிறந்த நாள்.  ராம் வேறு ஊரில் இல்லையென்பதால், விஜி, குழந்தைகள் வருத்தப் படாமல் இருக்க, என்னையும் குழந்தைகளையும் பள்ளி முடிந்தவுடன் வருமாறு கூப்பிட்டாள்.  அன்று, குழந்தைகளுடன் இருக்கவேண்டும் என்பதால், அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தாள்.

என் குழந்தைகள், இருவரும் பள்ளியிலிருந்து கிளம்பியதிலிருந்தே, “பசி, பசி” என்று கூறவே, நான், வழியில் வாங்கி வந்த ஸான்ட்விச்சைக் கொடுத்தேன்.  பிறகு, விஜி வீட்டிற்கு செல்லும் வழியில், பிறந்த நாள் கேக், வாங்கிக் கொண்டு ஒருவாறாக அவர்கள் வீட்டை அடைந்தேன். அவளது குழந்தைகள் இருவரும், மதியம் தூங்கி எழுந்து, அழகாய் புதுத்துணி அணிந்து இருந்தனர்.  விஜியின் மாமியார், அவளது ஓர்ப்படியின் குழந்தை மற்றும் தாயார், ஆகியோரும் இருந்தனர்.

இனிதே, கேக் வெட்டும் விழா நடந்தேறியது.

Rakshith-Rakshana's 3rd birthday

Rakshith-Rakshana's 3rd birthday

அனைவரும், கேக்கை உண்ட பிறகு, விஜி, குழந்தைகளுக்கு, கார்ன் ப்ரைட் ரைசும், காளிப்ளவர் பட்டாணி சப்ஜியும் கொடுத்தாள்.  என் இரு குழந்தைகளும், மிகவும் ருசித்து சாப்பிட்டனர்.  கார்த்திக் வேறு, கேட்டு கேட்டு சாப்பிட்டான்.  கிளம்புகிற நேரத்தில், அவன், விஜியிடம், “ஆன்ட்டி, கார்ன் ப்ரைட் ரைஸ் சூப்பர். நாங்கள் தினமும் ஸ்கூல் முடிந்தவுடன் நேரே உங்க ஆத்துக்கு, வர்ரோம். நீங்க, இன்னைக்கு செஞ்ச மாதிரியே daily செஞ்சிடுங்க” என்றானே பார்க்கணும், விஜி அவன் பேசியதைக் கேட்டு அசந்து நின்றாள்.  நான் தான் கார்த்திக்கிடம், “டேய், அவங்களும் அம்மா மாதிரி ஆபிஸ் போறவங்க தான். இன்னைக்கு குழந்தைகள் birthdayக்காக leave போட்டிருர்க்காங்க.” என்றேன்.  பாவமாய்ப் போன கார்த்திக்கின் முகத்தைப் பார்த்த விஜி, “கார்த்திக், உனக்கு, எப்போல்லாம் வேணுமோ, ஆன்ட்டிக்கு போன் பண்ணு.  நான் செஞ்சு வைக்கிறேன்.” என்றாள்.  அதைக் கேட்ட பிறகு தான் கார்த்திக்கின் முகத்தில் பழைய சிரிப்பு தெரிந்தது.