“தமிழுக்கும் அமுதென்று பேர்” யார்யா அப்படி சொன்னாங்க??

விக்னேஷ், கார்த்திக் இருவருக்குமே தமிழ்தான் இரண்டாம் மொழியாகப் பள்ளியில் நாங்கள் தேர்ந்த்தெடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் வசித்து, தமிழே சரிவர பேசத் தெரியாமல், எழுதத் தெரியாமல், ஹிந்தி அல்லது பிற மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்க எனக்கும் வைத்திக்கும் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில், இருவரும் சற்று கஷ்டப்பட்டாலும், பின்னர் அவர்கள் தமிழை விரும்பிப் படிப்பார்கள் என்று நினைத்தோம். வயது ஏறஏற அவர்களின் தமிழ்ப்பற்றும் அதிகமாகும் என்று நாங்கள் நினைக்க, அவர்களுக்கோ, அதற்கு நேர்மாறாக, அதிகம் படிக்க வேண்டுமே என்ற காரணத்தினாலேயே தமிழ் மீதான வெறுப்பு ரொம்ப அதிகமானது.

நேற்றிரவு, தொலைக்காட்சியில் பழைய திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பிய போது, “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற இனிமையான பாடல் ஒளிபரப்பானது. எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பார்த்தால், பாடல் முடிந்தவுடன், கார்த்திக் அவன் அண்ணனிடம், “யார்டா இப்படி சொன்னாங்க, “தமிழுக்கும் அமுதென்று பேர்”, அது actuallaa “”தமிழுக்கும் போர் என்று பேர்” என்று மாற்றிப் பாடுகிறான்.

நான் என் பள்ளி நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்…என் தமிழ் ஆசிரியர்களையும் அவர்களின் வகுப்புகளையும் இன்றும் எண்ணிப் பார்த்து பரவசமடையும் நிலையில் தான் இருக்கிறேன்!! 12ம் வகுப்பில் பிற முக்கிய பாடங்கள் இருப்பினும், தமிழாசிரியையின் வகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்! கம்ப இராமாயணமும், சிலப்பதிகாரமும், இன்னும் பல காப்பியங்களும், காவியங்களும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

யாராவது வந்து என் பசங்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊக்கிவிடுங்களேன்!! ப்ளீஸ், ப்ளீஸ்!!

Advertisements

விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறது!!

விக்னேஷ் எனும் என் முதல் பிள்ளை, வருங்காலத்தில் ஒரு பெரிய டாக்டராக வருவான் என்று நானும் என் கணவரும் கனாக் கண்டு கொண்டிருக்கிறோம்.  அவனுக்கும், ஆசை உண்டு என்பதால், அந்த இலக்கை நோக்கி பயணம் செய்வான் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.

சத்தான உணவு வகைகள், குழந்தைகளின் தினசரி உணவில் இருக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு சுண்டல் தான், விக்னேஷ் கார்த்திக் இருவருக்கும் பள்ளிக்கு ஸ்நாக்ஸ் அனுப்புவேன்.  பல வகை சுண்டல்களை சாப்பிடும் குழந்தைகள், வேர்க்கடலை சுண்டல் செய்தால் மட்டும், ஒரே மக்கர்.  அதன் நற்குணங்களை சொல்லிப் பார்த்தும் வேர்க்கடலை சுண்டல் சாப்பிட ரகளை.!! யோசித்துப் பார்த்ததில், குழந்தைகள் இருவருக்கும் தி.நகர் கடைத்தெருவில் ரோட்டில் விற்கும் “மசாலா பொரி” ரொம்ப இஷ்டம்.  எனவே, அவர்களிடம் அதை வைத்து கடலை சாப்பிட வைத்துவிடலாம், என்ற நம்பிக்கை வந்தது.

வாரம் ஒரு முறை, வேர்க்கடலை சுண்டல் செய்யும் நாள், காலங்கார்த்தாலேயே ஒரே அமர்க்களப்படும்.  ஒரு சின்ன டப்பர்வேர் டப்பாவில் வேக வைத்த வேர்க்கடலைகள், உப்பு, காரத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு.  இன்னொரு மூன்று பகுதிகளாய் பிரித்த டப்பாவில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி ஆகியவை பொடியாகத் துருவியது. கடைசியாய் ஒரு டப்பாவில், கொஞ்சம் பொரி மற்றும் ஓமப்பொடி. குழ்ந்தைகள் இருவரும், பள்ளியில் ஸ்நாக்ஸ் டைம்ல அனைத்தையும் கலந்து பிறகு சாப்பிடுமாறு இன்ஸ்டரக்சன்ஸ்.

விக்னேஷ் வகுப்பில், ஏற்கனவே அவனது தினசரி சுண்டல்கள் மிகவும் பாப்புலர்.  இந்த மசாலாப் பொரி ப்ரம்மாண்டமான ஒரு ஹிட்டானது.  வாரா வாரம் விக்னேஷ் கொண்டு செல்லும் அளவும், அதிகரித்தது.  நேற்று காலை, பரபரப்பாக, நான் மசாலாப் பொரிக்கான காய்களைத் துருவிக் கொண்டிருக்கும் போதே, அவன் ஸ்கூலுக்கு ரெடியானதால், நான் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று, என்னிடம், “அம்மா! நான் மசாலாப் பொரி கலந்த பிறகு, அழகாய் பொட்டலங்கள் செய்து, அதைக் கேட்கும் நண்பர்களுக்கு, ஒரு பொட்டலம் 5 ரூபாய் என்று வித்தால், மினிமம் 25 ரூபாய் க்யாரண்டி என்றான்”.  ஆஹா, என்னே உனது வியாபார அறிவு, என்று தாயுள்ளம் பூரித்தாலும், ஸ்கூல் வேன் தவறவிட்டால், ஆகக்கூடிய விளைவுகளை எண்ணி அஞ்சி, அவனை அதட்டி அழைத்துச் சென்றேன், வேன் பிடிக்க….

சங்கடஹர சதுர்த்தியன்று நான் அடைந்த சங்கடம்!!

நேற்று தான் இந்த வாரத்தின் முதல் வேலை நாள், திங்கட்கிழமை.  காலை, இரு பிள்ளைகளுக்கும் கிரிக்கெட் வகுப்பு இல்லாததால், அவர்கள் துயிலெழுந்ததே 8:30 மணிக்கு தான்.  பிறகு, நாங்கள் மூவரும் கிளம்பி, சென்னை டிராபிக்கில், மாட்டி, மீண்டு, என் பெற்றோர் வீட்டிற்குச் சென்று,  குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைத்து, நான் வேளச்சேரியில் உள்ள என் அலுவலகம் சென்ற போது, காலை மணி, 11க்கு மேலாகிவிட்டது.  பல்வேறு வித அலுவல்களின் காரணத்தால், நான் நேற்று அலுவலகத்திலிருந்து புறப்பட, மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.  நான், வழியிலேயே, என் பெற்றோருக்கு போன் செய்து, குழந்தைகள் இருவரையும், தயார் செய்து வைக்குமாறு கூறினேன்.  என் அம்மா உடனே என்னிடம், “எங்கே அவர்கள் இன்னும் விளையாடி ஓயவில்லை! இருவரும் உள்ளே வந்தவுடன், பூரி கிழங்கு செய்து வைத்திருக்கிறேன், ஊட்டி விட்டு விடுகிறேன்” என்றார்கள்.

நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன், விக்னேஷ், கார்த்திக் இருவரும் தயாராக இருந்தனர்.  என் நாக்கில் சனி, அவர்களிடம் நானே வலிய போய், “டேய்! இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி டா! நாம் சீக்கிரம் வீட்டிற்குப் போனால், நான் இரவு சமையல் வேலைகளை உடனே முடித்துக் கொண்டு, நாம் மூவரும், அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லலாம்” என்றேன்.  என் பெற்றோரின் வீட்டிற்கு மிக அருகில் ஒரு வீட்டில் சிறிய பிள்ளையார் கோயில் ஒன்றுள்ளது. சிறுவர்கள் இருவருமே முன் ஒரு காலத்தில், அந்த பிள்ளையார் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியன்று என் தாய் தந்தையருடன் செல்வார்கள். ஸ்வாமி தரிசனம் செய்து, ஸ்லோகங்கள் கூறினாலும், குழந்தைகள் என்பதற்கேற்ப, பூஜை முடிந்த பிறகு கிடைக்கும் பிரசாதம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அழகிய சிறு தொன்னையில், சுடச்சுட வெண் பொங்கல், கொண்டை கடலை சுண்டல், இரண்டு மூன்று வெல்ல கொழக்கட்டைகள், பால், பஞ்சாம்ருதம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

அதை நினைத்தார்களோ என்னவோ! இருவரும், என் பெற்றோர் இல்லத்திலேயே அன்றிரவு தங்க அடம் செய்தனர். என் கணவரிடம், போன் செய்து, அதைக் கூறிய போது, அவர் அவர்களை எங்கள் வீட்டிற்கே வருமாறு கூறிவிட்டார். முதலில் இருவரும் சமாதானம் ஆகாமல் அடம் பிடித்தனர்.  மணி மாலை ஆறைத் தாண்ட, எனக்கு டென்ஷன் ஏறியது.  நான் அவர்களைப் பார்த்து கத்த, விக்னேஷ் உடனே, “சரி, நாங்கள் உன்னுடன் வர சம்மதிக்கிறோம். ஆனால், ஒரு கண்டிஷன்! நீ உன் வேலைகளை முடித்து, எங்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றும், எங்களுக்கு பிரசாதம் கிடைக்கவில்லை என்றால், நீ எங்களுக்கு, கோயிலில் கிடைக்கும் பிரசாதம் அனைத்தையும் செய்து, ராத்திரியே தர வேண்டும்” என்றான். கார்த்திக்கிற்கும் அந்த யோஜனை மிகவும் பிடித்துப் போக, அவனும் அண்ணனுடன் சேர்ந்து சிந்து பாடினான்.

அப்போதைக்கு, அவர்களை, அங்கிருந்து கிளப்ப, நான் சரியென்று ஒப்புக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம்.  எங்கள் வீடு போய் சேரும் போது மணி, இரவு 7:15.  நல்ல வேளையாக, என் மாமியார், ரசமும்,  கீரை தாலும் செய்திருந்தார்கள். நான் அவசரம் அவசரமாக குக்கர் வைத்து, சாதம், குழந்தைகளுக்கு பருப்பு, பீன்ஸ் பொரியல் என்று முடிக்கும் போதே மணி 7:50. மூவரும், காரில் ஏறிக் கொண்டு, எப்போதும் போகும் சுப்ரமண்ய ஸ்வாமி கோயிலுக்குச் சென்றோம். என் போறாத வேளை, கோயில் திறந்திருந்ததே தவிர பிரசாதம் வினியோகம் முடிந்திருந்தது.

உடனே விடு ஜூட் அடுத்த கோயிலுக்கு! நவசக்தி விநாயகர் கோயில்! வழி முழுக்க நான் ஒரே பிரார்த்தனை, இந்த கோயிலிலாவது பிரசாதம் கிடைக்க வேண்டும் என்று. சிறுவர்களுக்கோ முகத்திலேயே தெரிந்தது குஷி! அவர்கள் தான் வெல்வார்கள் என்று.  நான் இரவு படப் போகும் பாட்டை நினைத்து!

நல்ல வேளையாய், நவசக்தி விநாயகர் என் நெஞ்சில் பாலை வார்க்கும் விதமாய், புளியோதரை ரூபத்தில் பிரசாதமாய்க் காட்சியளித்தார். அதை வாங்கி நன்றாக ருசித்து உண்டனர்.  முடித்தவுடன், இருவரும் என்னிடம், “நமக்கு வழக்கமாய்க் கிடைக்கும் பிரசாதம் எதுவுமே இன்று கிடைக்கவில்லை! எனவே, நீ வீட்டிற்கு வந்தவுடன், நம் டீல் படி எங்களுக்கு நாங்கள் கேட்டது அத்தனையும் செய்து தர வேண்டும்” என்றனர்.  எப்படியோ சமாளித்து, இன்று செய்து தருவதாய் வாக்களித்திருக்கிறேன்!!!

சங்கடம் இன்னும் தீரவில்லை!!!

கெட்டது இராத் தூக்கம், IPL போட்டிகளால்!!

மார்ச் 12, 2010 வரை, தினமும் தூங்கச் செல்ல, என் இரு வாண்டுகளும், இரவு 10 அல்லது 11 மணியானாலும்,  ஏதாவது காரணம் தேடிக் கொண்டிடுப்பார்கள். சில sample காரணங்கள் : “பசிக்கிறது!!(சாப்பிட்டு சிறிது நேரமே ஆகியிருந்தாலும்!!); அல்லது “ஒன் பாத்ரூம்/டூ பாத்ரூம் (இதற்கு நாம் கண்டிப்பாக எதிர்ப்பு சொல்ல முடியாதே!!) ; கொஞ்ச நேரம் ஏதாவது கதை சொல்லுப்பா, அல்லது சொல்லுமா; இப்படி பல.

இப்போதோ, தினமும் IPL போட்டியைச் சாக்காக வைத்து, தூங்க 12 மணியாக்கிவிடுகிறார்கள்.  காலை என்னாலயே 5:30 மணிக்கு எழ கஷ்டமாக இருக்கிறது. விக்னேஷை 6 மணிக்கும், கார்த்திக்கை 7 மணிக்கும் எழுப்புவதற்குள், என் ப்ராணனில் பாதி செலவழிந்து விடுகிறது.  ஸ்கூல் விடுமுறை தொடங்க இன்னும் பல நாட்கள் இருப்பதால், எனது இந்த புதிய கவலை மேலும் சில நாட்கள் தொடரும்.

விக்கிபீடியா! இந்தா, பிடியா என் பாராட்டை!!!……..

நான் ஆரம்பித்து முடிக்காத சில வேலைகளுள், முதன்மையான ஒன்று, M.B.A. டிகிரி வாங்க ஆசைப்பட்டு, இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில்(IGNOU) சேர்ந்தது.  21 தியரி(theory) பேப்பர்களை வெற்றியுடன் முடித்த நான், ஒரே ஒரு ப்ராஜக்ட் வொர்க்குக்காக, 2 வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறேன்.  நேற்று, அது சம்பந்தமாக, ஒரு விரியுரையாளரை சந்திக்கச் செல்ல முடிவெடுத்து, மாலை பள்ளி முடிந்தவுடன், இரு குழந்தைகளுக்கும், pizza வாங்கிக் கொடுத்து, வீட்டில் கீழே விளையாடுமாறு கூறிவிட்டு, சென்றேன்.

திரும்பி வந்தால், முதல் நியூஸ், “கார்த்திக் கண்ணாமூச்சி விளையாடும் போது, ஒரு அப்போது தான் நிறுத்தப்பட்ட பைக்கின் சைலன்சரில் சுட்டுக் கொண்டான்” என்று.

பர்னால் தடவப் பட்ட இடத்தைக் கண்காணித்தேன். சற்றே கொப்பளமாகியிருந்தது. உடனே, விக்னேஷ் என்னிடம், “அம்மா! ஏன்  இரத்தம் வரவில்லை?” என்றான்; நான் “தோலின் மேல் பகுதியில் தான் சூடு பட்டுள்ளது. அதற்கடுத்த உட்பகுதியில், பட்டால் தான் இரத்தம் எல்லாம் வரும்” என்றேன். விடவில்லை கார்த்திக். “அப்போ, சதை(flesh)யின் கீழ் இரத்தம் உள்ளதா? அல்லது தசை(muscle)யின் கீழ் உள்ளதா?” என்று தன் சந்தேகத்தை எழுப்பினான். எனக்கோ, மணி இரவு 7:30. இன்னும் குக்கர் கூட வைத்த பாடில்லை. இதில் இவர்களின் சந்தேகம் வேறா! என்றிருந்தது. நான் அவர்களைப் பார்த்த பார்வையிலேயே, விக்னேஷ், “சரி சரி, நீ சொல்ல வருவது புரிகிறது. எப்படியும், நானும், உங்கள் சந்தேகத்தை கூகிள், அல்லது விக்கிபீடியா இவற்றில் தான் தேடப் போகிறேன், அதை நீங்களே செய்யக் கூடாதா!!” என்று கூற, எனக்கு மிகுந்த relief!!!

யோசிச்சுப் பார்த்தால், computer, google, wikipedia இவை இல்லாத உலகில் எப்படி வாழ்வது?? என்று மிகுந்த மலைப்பாக இருக்கிறது. வாழ்க கூகிள், வளர்க விக்கிபீடியா என்று விடை பெறுகிறேன்!!!

“அப்பாடா, இனி இந்த அண்ணாவோட அலட்டல் எங்கிட்ட செல்லாது!!!”

கடந்த பத்து பதினைந்து நாட்களாக விக்னேஷின் அலட்டல் எனக்கே சற்று “ஓவராக” தான் இருந்தது.  விஷயம் இது தான் – விக்னேஷின் போரூர் பள்ளியில் ஒரு வென்டிங் மெஷின் வைத்திருக்கின்றனர். அதில், நம் விருப்பத்திற்கேற்ப “பால், சாக்லேட் மில்க் அல்லது கப் நூடுல்ஸ்” இவற்றை பணம் கொடுத்துப் பெறலாம்.  குழந்தைகள் காலங் கார்த்தாலயே, எழுந்ததும் எழாமலும் பள்ளிக்குச் சென்றுவிடுவதால், மிகுந்த நேரம் பசியுடன் உள்ளனர், அல்லது, அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்கின்றனர். இரு வாரமாக, தினமும், மாலை விக்னேஷ் என்னிடமும் கார்த்திக்கிடமும் ஒரே அலட்டல் “இன்று நூடுல்ஸ் டிரை பண்ணினோம், இன்று பால் குடித்தேன்”, என்று.

இன்று அவனின் அலட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாற் போல், கார்த்திக்கின் பள்ளியிலும் அதே வென்டிங் மெஷினை வைத்திருக்கின்றனர்.  அவனும் குஷியாக என்னிடம் இன்று மாலை, பள்ளி விட்டதும், “அம்மா, எங்க ஸ்கூல்லயும், இன்னைக்கு காபி, நூடுல்ஸ், ஆகியவைக்கான மெஷின் வைச்சிருக்காங்க, எனக்கும் வாங்கிக் கொடு” என்று.  ஏன் இந்த அவசரம் என்று கேட்டால், “அண்ணா மட்டும் தான் அலட்டிப்பானா?? நானும் காட்டறேன், என் பவரை!!” என்றான் கார்த்திக்.

நல்ல வேளை, நான் தப்பித்தேன், அவனிடமிருந்து!!!

சுறுசுறுப்பாய் இருப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

விக்னேஷின் வகுப்பில் தமிழாசிரியர் சென்ற வாரம் பட்டிமன்றம் அறிவித்திருந்தார். பட்டிமன்ற தலைப்பு, “சுறுசுறுப்பாய் இருப்பவர்கள் ஆண்களா? பெண்களா?”.  மூன்று ஆண்களை ஆண்கள் சார்பாகவும், மூன்று பெண்களை பெண்கள் சார்பாகவும் பேச அழைத்திருந்தார்.  விக்னேஷ் அவர்களுள் ஒருவனாய்த் தேர்வாகியிருந்தான்.  பள்ளி விட்டதுமே, என்னிடம் இந்த விஷயத்தைக் கூறினான்.  நானோ, “ஆண்களே சுறுசுறுப்பானவர்கள் என்று, பெண்ணாய் இருந்து கொண்டு நான் எப்படி சொல்லித்தர முடியும்” என்றேன்.  பிறகு, வீட்டில் அன்றிரவு  தன் தந்தையிடமும் இதைப் பற்றிக் கூறவே, நான், என் கணவர், மற்றும் அவர் தாயார் அனைவரும், குறிப்புகளைச் சேகரித்து விக்னேஷிடம் கொடுத்தோம்.  மறுநாள், பள்ளியில், பட்டிமன்றம் இனிதே நடந்தேறியது.  தமிழாசிரியர் அவன் வகுப்பிலிருந்த மாணவ மாணவியரை, ஒவ்வொரு பேச்சாளருக்கும், தங்களுக்குப் பிடித்திருந்தால், வாக்களிக்குமாறு கூறியிருக்கிறார்.  விக்னேஷ் அதிக வாக்குகள் பெற்று, வென்றிருக்கிறான்.