“தமிழுக்கும் அமுதென்று பேர்” யார்யா அப்படி சொன்னாங்க??

விக்னேஷ், கார்த்திக் இருவருக்குமே தமிழ்தான் இரண்டாம் மொழியாகப் பள்ளியில் நாங்கள் தேர்ந்த்தெடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் வசித்து, தமிழே சரிவர பேசத் தெரியாமல், எழுதத் தெரியாமல், ஹிந்தி அல்லது பிற மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்க எனக்கும் வைத்திக்கும் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில், இருவரும் சற்று கஷ்டப்பட்டாலும், பின்னர் அவர்கள் தமிழை விரும்பிப் படிப்பார்கள் என்று நினைத்தோம். வயது ஏறஏற அவர்களின் தமிழ்ப்பற்றும் அதிகமாகும் என்று நாங்கள் நினைக்க, அவர்களுக்கோ, அதற்கு நேர்மாறாக, அதிகம் படிக்க வேண்டுமே என்ற காரணத்தினாலேயே தமிழ் மீதான வெறுப்பு ரொம்ப அதிகமானது.

நேற்றிரவு, தொலைக்காட்சியில் பழைய திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பிய போது, “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற இனிமையான பாடல் ஒளிபரப்பானது. எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பார்த்தால், பாடல் முடிந்தவுடன், கார்த்திக் அவன் அண்ணனிடம், “யார்டா இப்படி சொன்னாங்க, “தமிழுக்கும் அமுதென்று பேர்”, அது actuallaa “”தமிழுக்கும் போர் என்று பேர்” என்று மாற்றிப் பாடுகிறான்.

நான் என் பள்ளி நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்…என் தமிழ் ஆசிரியர்களையும் அவர்களின் வகுப்புகளையும் இன்றும் எண்ணிப் பார்த்து பரவசமடையும் நிலையில் தான் இருக்கிறேன்!! 12ம் வகுப்பில் பிற முக்கிய பாடங்கள் இருப்பினும், தமிழாசிரியையின் வகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்! கம்ப இராமாயணமும், சிலப்பதிகாரமும், இன்னும் பல காப்பியங்களும், காவியங்களும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

யாராவது வந்து என் பசங்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊக்கிவிடுங்களேன்!! ப்ளீஸ், ப்ளீஸ்!!

Advertisements

தமிழே அமுதே அழகே!!

இச் சம்பவம் என் மகன் விக்னேஷ் முதல் வகுப்பில் படிக்கும் பொழுது நடந்தது.  அவர்கள் பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து, இரண்டாவது மொழிப் பாடம் உண்டு. விக்னேஷ்க்கு நானும் என் கணவரும் தமிழ் மொழி தான்  தேர்வு செய்தோம். ஏனெனில் தமிழ் நாட்டிலிருந்துகொண்டு தமிழ் தெரியாதென்றால் மிகவும் கேவலம் என்று தோன்றியது.

நாங்கள் படித்துக்கொண்டிருந்த நாட்களில், தமிழ் மொழி நடத்துபவர்கள், “அகர முதல எழுத்தெல்லாம்..” என்பதற்கேற்ப, உயிர் எழுத்துக்கள் ” அ, ஆ, இ, ஈ,…” என்று தான் முதலில் தொடங்குவார்கள். ஆனால், இவர்கள் பள்ளியில், முதல் நாள், சொல்லிக் கொடுத்திருந்த எழுத்துக்கள், ” ட, ப, ம”, தொடர்ந்து “ட், ப், ம்”, அவற்றால் உண்டாகக் கூடிய சொற்களான “படம்”, “பாடம்”, “மடம்”, “மாடம்”, “பட்டம்”, “மட்டம்” போன்ற சொற்களாகும்.  அவர்கள் உயிர் எழுத்துக்கள் தொடங்கும் போது பள்ளி தொடங்கி 3 மாதங்கள் முழுவதுமாய் முடிந்திருந்தது.  மாணவர்களின் எளிய புரிந்து கொள்வதற்கெனவே இவ்வாறு நடத்துவதாய் தெரிவித்தனர்.

சில நாட்கள் கழிந்து விக்னேஷ் ஒரு நாள் என்னிடம் வந்து “அம்மா, இன்று தமிழாசிரியை சில சொற்கள் நடத்தினார்கள். தாத்தா, பாப்பா, காக்கா, மாமா என்று.   முதல் மூன்று சொற்களைப் போல ஏன் நாம் மாம்மா என்று எழுத மாட்டேங்கறோம், மாமா என்று எழுதுகிறோம்??” என்று வினவினான்.  எனக்கே அதற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.  நான் அவனிடம், “அதற்கான இலக்கண விதிகளை பின்னர் நீ படிப்பாய்” என்று கூறி முடித்தேன்.