“தமிழுக்கும் அமுதென்று பேர்” யார்யா அப்படி சொன்னாங்க??

விக்னேஷ், கார்த்திக் இருவருக்குமே தமிழ்தான் இரண்டாம் மொழியாகப் பள்ளியில் நாங்கள் தேர்ந்த்தெடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் வசித்து, தமிழே சரிவர பேசத் தெரியாமல், எழுதத் தெரியாமல், ஹிந்தி அல்லது பிற மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்க எனக்கும் வைத்திக்கும் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில், இருவரும் சற்று கஷ்டப்பட்டாலும், பின்னர் அவர்கள் தமிழை விரும்பிப் படிப்பார்கள் என்று நினைத்தோம். வயது ஏறஏற அவர்களின் தமிழ்ப்பற்றும் அதிகமாகும் என்று நாங்கள் நினைக்க, அவர்களுக்கோ, அதற்கு நேர்மாறாக, அதிகம் படிக்க வேண்டுமே என்ற காரணத்தினாலேயே தமிழ் மீதான வெறுப்பு ரொம்ப அதிகமானது.

நேற்றிரவு, தொலைக்காட்சியில் பழைய திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பிய போது, “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற இனிமையான பாடல் ஒளிபரப்பானது. எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பார்த்தால், பாடல் முடிந்தவுடன், கார்த்திக் அவன் அண்ணனிடம், “யார்டா இப்படி சொன்னாங்க, “தமிழுக்கும் அமுதென்று பேர்”, அது actuallaa “”தமிழுக்கும் போர் என்று பேர்” என்று மாற்றிப் பாடுகிறான்.

நான் என் பள்ளி நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்…என் தமிழ் ஆசிரியர்களையும் அவர்களின் வகுப்புகளையும் இன்றும் எண்ணிப் பார்த்து பரவசமடையும் நிலையில் தான் இருக்கிறேன்!! 12ம் வகுப்பில் பிற முக்கிய பாடங்கள் இருப்பினும், தமிழாசிரியையின் வகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்! கம்ப இராமாயணமும், சிலப்பதிகாரமும், இன்னும் பல காப்பியங்களும், காவியங்களும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

யாராவது வந்து என் பசங்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊக்கிவிடுங்களேன்!! ப்ளீஸ், ப்ளீஸ்!!

Advertisements

மாங்காயை எடு, ஜெராக்ஸ் போடு!!

வழக்கமான வார நாட்களின் காலை பரபரப்பில், நானும் குழந்தைகளும் அவசர கதியில் அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தோம்.  ஸ்கூல் பஸ் வெகு சீக்கிரம் வருமென்பதால், காலையில் குழந்தைகள் இருவரும் அனாவசிய பேச்சுகளில் நேரம் செலவழித்தால் எனக்கு பயங்கர கோவம் வரும்.  இன்று கார்த்திக் திடீரென்று என்னிடம் வந்து, “அம்மா, நான் அடிக்கடி உன்னை கச்சா மேங்கோ சாக்லேட் வாங்கித்தா! என்று அடம் பிடிக்கிறேன் ரைட்டா? அதுக்கு பதில், நீ இப்ப போய் ஒரு மாங்காய் வாங்கிண்டு வா, நாம் சாயங்காலம் ஜெராக்ஸ் கடைக்கு போய், அதை கொடுத்து(எதை, அந்த மாங்காயை தான்!!) 15 காப்பி ஜெராக்ஸ் கேட்டா, அவர்கள் 15 கச்சா மேங்கோ சாக்லேட் கொடுப்பார்கள், உனக்கும் கவலையில்லை, எனக்கும் ஜாலி!!” என்றான். அவன் கூறியதை வைத்து கார்த்திக் இவ்வளவு இன்னோசென்ட்டா?  என்ற கேள்வி தோன்றியது!!

நீ தான் மெச்சிக் கொள்ளவேண்டும்!!

ஊத்துக்காடு வெங்கட சுப்ரமணிய ஐயரின் அற்புதமான இந்த பாடல் வரிகள் என் மனத்தில் கடந்த இரு தினங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. யசோதை பாடுவது போல அமைந்துள்ள பாடலில், அவள் அங்கு கூடியிருக்கும் பெண்களிடம், கண்ணனின் குறும்புகளையும், லீலைகளையும் கூறி முடியவில்லை என்பதாய் இருக்கும். சரணத்தில்,

“செய்யும் துஷ்டத்தனத்திற்கோர் எல்லையே இல்லை

தேடிப் பிடிக்க என்னால் ஆகவும் இல்லை

கையும் களவுமாக்க காலமும் வ(ர)ல்லை

ஆனால் காலம் தவறாது கோள் சொல்ல வந்து நின்ற

மாதர்க்கு விடை சொல்ல நேரமும் இல்லை”

என்று முடிப்பார்.

அதைப் போல இந்த பள்ளியாண்டு தொடங்கியது முதற்கொண்டு என் இளைய மகன் கார்த்திக் வாரம் ஒரு முறையாவது ஸ்கூலில் ஏதாவது வம்பு தும்பில் மாட்டிக் கொண்டு, பெற்றோரை ஆசிரியர் பார்க்க வேண்டும் என்கிற ரேஞ்சிற்கு போய்விடுகிறான்.

போன வெள்ளிக்கிழமை, அதிசயமாக நான் ஒரு கலை வகுப்பிற்குச் சென்றிருந்தேன்.  அது பொறுக்கவில்லை என் சிறிய மகனுக்கும், அவன் டீச்சருக்கும்.  வந்ததே ஒரு போன், “மேடம், நான் கார்த்திக்கின் ஆசிரியை பேசுகிறேன்!”. எனக்கு உடனே, அவன் கீழே விழுந்து ஏதாவது பெரிய அடியோ! என்று பதறியது. ஆனால், அவர்களோ, “கார்த்திக், இன்று வகுப்பில் ஆசிரியை இல்லாத போது, மற்றொரு பையனை விளையாட்டிற்கு உதைக்கப் போய், அவன் கீழே விழுந்து, அவன் கண்ணாடியும் விழுந்து, கண்ணாடி உடைந்து விட்டது. அந்த குழந்தையின் பெற்றோர்கள் ஏதாவது புகார் செய்தால், தாங்கள் இங்கு பள்ளிக்கு வரவேண்டியிருக்கும்!” என்றார்கள். “ரொம்ப சாரி,” சொல்லிவிட்டு, சரி என்று போனை வைக்கப் போனால், அவர்கள் மேலும் விடாமல்,

  • கார்த்திக் வகுப்பில் உட்காருவதே இல்லை
  • கார்த்திக் வகுப்பில் வாயை மூடுவதே இல்லை
  • கார்த்திக், சாப்பிடும் போது, ரொம்ப சிந்துகிறான்
  • கார்த்திக் இப்படி, அப்படி என்று

ஒரு பெரிய லிஸ்ட்.  நானும் அவன் சற்றும் இளைப்பாறிவிடக் கூடாது என்ற முடிவில், வாரம் பூரா ஸ்கூல் முடிந்த கையோடு இந்த கிளாஸ், அந்த கிளாஸ் என்றும், வார இறுதியில் அதற்கும் அதிகமாகவும் வாட்டி வதைக்கிறேன். ஆனால், எங்கு சென்றாலும், என் மகனை ஒரு புறம் அவன் மிகவும் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவன், அதிவேகமாக செயல் படுபவன் என்றெல்லாம், கூறினாலும், எல்லாரும் கேட்கும் ஒரே கேள்வி, “அவனை எப்படி சமாளிக்கிறீர்கள்????” என்பது தான்.

கார்த்திக்கை நல்ல படியாக வளர்க்க நான் தான் எங்காவது கிளாஸ் போக வேண்டும்.!!!!

 

குட்டீஸ்களின் சுட்டிப் பேச்சு!!

நேத்திக்கு என் கணவரின் கஸின் சிஸ்டரோட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம்!! அங்கே நடந்த சில சுவாரஸியமான பேச்சுக்கள்!!

குட்டிப் பெண் அனுவிற்கு ஒரே சந்தோஷம், தன் அக்காவிற்கு நிச்சயதார்த்தம் என்று!! அக்காவிடம் போய், “கல்யாணம் எப்போ?” என்று கேட்க, அவள் பதிலுக்கு, “ஜூலை 2011” என்று சொல்ல, குழந்தை உடனே, “அதுக்கு எதுக்கு இப்பவே நிச்சயதார்த்தம் பண்ணனும், ஜூன் 2011ல பண்ணினா போறாதா!” என்று பெரிய மனுஷி போல கேட்க, அங்கே ஒரே சிரிப்பு தான்!!

நிச்சயதார்த்தம் மேடையில் சீர்வரிசை வைத்திருந்தோம்.  நிறைய வகைகளில் பழங்கள், உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வண்ண வண்ண சாக்லேட் என்று மேடையில் காலி இடமே இல்லை என்னும் வண்ணம் அடுக்கப் பட்டிருந்தது.  கார்த்திக் கண்ணில், “பெராரே ரோஷே” என்னும் வெளிநாட்டுச் சாக்லேட் பட்டுவிட்டது. உடனே என்னிடம் வந்து, “அம்மா, நான் அதில் ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கட்டுமா? என்று கெஞ்சியது. நான் அவனிடம், “டேய், இந்த சீர் வரிசையெல்லாம் நாம் மாப்பிள்ளைக்காக வைத்ததுடா!, நாமளே எடுத்துக்க இல்ல” என்றேன். உடனே அவன், “நான் மாப்பிள்ளையா ஆயிட்டேன்னா, எனக்கும் இதெல்லாம் வைப்பாங்களா?” என்கிறான்!!!

இப்பவே கண்ண கட்டுதே!! என் இனிய மருமகளே! மிஞ்சிப் போனா, அவ இப்போ தான் பிறந்து நடை பழகிக் கொண்டிருக்கிறாளோ, அல்லது ஏதோவொரு ஸ்கூலில் ப்ரீ-கேஜி அல்லது எல்-கேஜி படிக்கிறாளோ!!” நீ வரும் நாளை, நானும் என் மகனும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!

இந்த நாள், அந்த வருடம் (2002, ஜூன் 18)!!!

டைட்டிலைக் கேட்டாலேச் சும்மா அதிருதில்ல!! ஏன்னா, இது எங்க வீட்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் பத்தியது.  1999 மார்ச்சில் இனிதே என் திருமணம் திருவாளர் வைத்தியநாதன் என்கிற சந்தருடன் நடைபெற, அதன் முக்கியப் பயனாக அந்த வருடக் கடைசியிலேயே, டிசம்பர் 7ம் நாள், என் சீமந்த புத்திரன், விக்னேஷ், பிறந்தான்.  2002ம் ஆண்டு, ஜூன் 18 அன்று, இனிய காலை வேளையில், 8:46 மணிக்கு கார்த்திக் பிறந்தான்.

முதல் குழந்தை ஆணாகிப் போனதால், இரண்டாவதாவது, ஒரு பெண்ணாக இருக்க வேண்டுமே என்று, மனதினில் ஒரே வேண்டுதல்கள்.  என் தாயார், பெரிய மகனை கவனிக்க வேண்டுமென்பதால், நானும் என் கணவரும் மட்டும் ஜூன்  16 அன்று அட்மிட் ஆனோம்.  ஜூன் 18 வரை குழந்தை என்  கருப்பையில் இதமாக, சுகமாக இருந்துவிட்டு, அழகாய் ஜூன் 18 காலை 8:46 மணிக்கு ஜனனமாகியது.

வளர்ந்து, இந்த நிலை வரை வந்த கதைகள் வேறு இடுகைகளில் இடம் பெறும்.!!

சங்கடஹர சதுர்த்தியன்று நான் அடைந்த சங்கடம்!!

நேற்று தான் இந்த வாரத்தின் முதல் வேலை நாள், திங்கட்கிழமை.  காலை, இரு பிள்ளைகளுக்கும் கிரிக்கெட் வகுப்பு இல்லாததால், அவர்கள் துயிலெழுந்ததே 8:30 மணிக்கு தான்.  பிறகு, நாங்கள் மூவரும் கிளம்பி, சென்னை டிராபிக்கில், மாட்டி, மீண்டு, என் பெற்றோர் வீட்டிற்குச் சென்று,  குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைத்து, நான் வேளச்சேரியில் உள்ள என் அலுவலகம் சென்ற போது, காலை மணி, 11க்கு மேலாகிவிட்டது.  பல்வேறு வித அலுவல்களின் காரணத்தால், நான் நேற்று அலுவலகத்திலிருந்து புறப்பட, மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.  நான், வழியிலேயே, என் பெற்றோருக்கு போன் செய்து, குழந்தைகள் இருவரையும், தயார் செய்து வைக்குமாறு கூறினேன்.  என் அம்மா உடனே என்னிடம், “எங்கே அவர்கள் இன்னும் விளையாடி ஓயவில்லை! இருவரும் உள்ளே வந்தவுடன், பூரி கிழங்கு செய்து வைத்திருக்கிறேன், ஊட்டி விட்டு விடுகிறேன்” என்றார்கள்.

நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன், விக்னேஷ், கார்த்திக் இருவரும் தயாராக இருந்தனர்.  என் நாக்கில் சனி, அவர்களிடம் நானே வலிய போய், “டேய்! இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி டா! நாம் சீக்கிரம் வீட்டிற்குப் போனால், நான் இரவு சமையல் வேலைகளை உடனே முடித்துக் கொண்டு, நாம் மூவரும், அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லலாம்” என்றேன்.  என் பெற்றோரின் வீட்டிற்கு மிக அருகில் ஒரு வீட்டில் சிறிய பிள்ளையார் கோயில் ஒன்றுள்ளது. சிறுவர்கள் இருவருமே முன் ஒரு காலத்தில், அந்த பிள்ளையார் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியன்று என் தாய் தந்தையருடன் செல்வார்கள். ஸ்வாமி தரிசனம் செய்து, ஸ்லோகங்கள் கூறினாலும், குழந்தைகள் என்பதற்கேற்ப, பூஜை முடிந்த பிறகு கிடைக்கும் பிரசாதம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அழகிய சிறு தொன்னையில், சுடச்சுட வெண் பொங்கல், கொண்டை கடலை சுண்டல், இரண்டு மூன்று வெல்ல கொழக்கட்டைகள், பால், பஞ்சாம்ருதம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

அதை நினைத்தார்களோ என்னவோ! இருவரும், என் பெற்றோர் இல்லத்திலேயே அன்றிரவு தங்க அடம் செய்தனர். என் கணவரிடம், போன் செய்து, அதைக் கூறிய போது, அவர் அவர்களை எங்கள் வீட்டிற்கே வருமாறு கூறிவிட்டார். முதலில் இருவரும் சமாதானம் ஆகாமல் அடம் பிடித்தனர்.  மணி மாலை ஆறைத் தாண்ட, எனக்கு டென்ஷன் ஏறியது.  நான் அவர்களைப் பார்த்து கத்த, விக்னேஷ் உடனே, “சரி, நாங்கள் உன்னுடன் வர சம்மதிக்கிறோம். ஆனால், ஒரு கண்டிஷன்! நீ உன் வேலைகளை முடித்து, எங்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றும், எங்களுக்கு பிரசாதம் கிடைக்கவில்லை என்றால், நீ எங்களுக்கு, கோயிலில் கிடைக்கும் பிரசாதம் அனைத்தையும் செய்து, ராத்திரியே தர வேண்டும்” என்றான். கார்த்திக்கிற்கும் அந்த யோஜனை மிகவும் பிடித்துப் போக, அவனும் அண்ணனுடன் சேர்ந்து சிந்து பாடினான்.

அப்போதைக்கு, அவர்களை, அங்கிருந்து கிளப்ப, நான் சரியென்று ஒப்புக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம்.  எங்கள் வீடு போய் சேரும் போது மணி, இரவு 7:15.  நல்ல வேளையாக, என் மாமியார், ரசமும்,  கீரை தாலும் செய்திருந்தார்கள். நான் அவசரம் அவசரமாக குக்கர் வைத்து, சாதம், குழந்தைகளுக்கு பருப்பு, பீன்ஸ் பொரியல் என்று முடிக்கும் போதே மணி 7:50. மூவரும், காரில் ஏறிக் கொண்டு, எப்போதும் போகும் சுப்ரமண்ய ஸ்வாமி கோயிலுக்குச் சென்றோம். என் போறாத வேளை, கோயில் திறந்திருந்ததே தவிர பிரசாதம் வினியோகம் முடிந்திருந்தது.

உடனே விடு ஜூட் அடுத்த கோயிலுக்கு! நவசக்தி விநாயகர் கோயில்! வழி முழுக்க நான் ஒரே பிரார்த்தனை, இந்த கோயிலிலாவது பிரசாதம் கிடைக்க வேண்டும் என்று. சிறுவர்களுக்கோ முகத்திலேயே தெரிந்தது குஷி! அவர்கள் தான் வெல்வார்கள் என்று.  நான் இரவு படப் போகும் பாட்டை நினைத்து!

நல்ல வேளையாய், நவசக்தி விநாயகர் என் நெஞ்சில் பாலை வார்க்கும் விதமாய், புளியோதரை ரூபத்தில் பிரசாதமாய்க் காட்சியளித்தார். அதை வாங்கி நன்றாக ருசித்து உண்டனர்.  முடித்தவுடன், இருவரும் என்னிடம், “நமக்கு வழக்கமாய்க் கிடைக்கும் பிரசாதம் எதுவுமே இன்று கிடைக்கவில்லை! எனவே, நீ வீட்டிற்கு வந்தவுடன், நம் டீல் படி எங்களுக்கு நாங்கள் கேட்டது அத்தனையும் செய்து தர வேண்டும்” என்றனர்.  எப்படியோ சமாளித்து, இன்று செய்து தருவதாய் வாக்களித்திருக்கிறேன்!!!

சங்கடம் இன்னும் தீரவில்லை!!!

அடிச்ச அடில கார்த்திக் பல்லு எகிறிடுத்து!!

இன்று காலை வெகு சீக்கிரமே விடிந்துவிட்டது.  என் கணவர் அதிகாலையிலேயே கிளம்பி, ரோடு மார்க்கமாக விஜயவாடாவில் இன்றிரவு நடக்கவிருக்கும் அவரது நண்பரின் மகள் திருமணத்திற்குக் கிளம்பினார். குழந்தைகள் இருவரும் கிரிக்கெட் வகுப்பு, கடுமையான மழையினால் ரத்தானதால், நல்ல தூக்கம். 8 மணிக்கு தான் எழுந்தார்கள். எழுந்த பிறகும், தொடர்ந்து மக்கர் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதிலும் கார்த்திக் அடங்காமல், ஏதோ பிதற்றிக்கொண்டிருந்தான்.  ரொம்ப பொறுத்திருந்தேன். எனினும், அவன் விடாமல் படுத்தியதில், எனக்கு கோபம் தலைக்கேற, ஒரு அடி வாயில் வைக்க எண்ணி, வைத்தேன்.  பாவம், ஏற்கனவே அவனுக்கு ஒரு பல் மிகவும் ஆடிக் கொண்டிருந்ததால், அது நான் அடித்த அடியில், பிய்ந்து, வாய் பூரா ரத்தம் வந்து, அவன் வேறு அந்த விழுந்த பல்லை முழுங்கிவிட்டான்.

வலி ஒரு பக்கம், கிலி மறு பக்கம். பல்லை முழுங்கியதால், ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று. பல நண்பர்களிடம் எக்ஸ்ப்ரட் ஒபீனியன் கேட்ட பிறகு தான் திருப்தி ஏற்பட்டது. முழுங்கிய பல், நாளைக்குள் வெளி வந்துவிடும் என்று.

அய்யோ, இன்று தான், நான் நேரில், அடிக்கிற அடியில் பல்லு எகிறியதைப் பார்த்தேன்.!!