அடிக்கடி அடி வாங்கினாலும் அடங்காமல் தீபாவளி கொண்டாட்டம்!!

இந்த முறை தீபாவளிப் பண்டிகை எங்களை ஒரு கை பார்த்துவிட்டது. தீபாவளிக்காக முள்ளு முறுக்கு செய்யும் போதே, எண்ணெயில் மாவை இட்டவுடனே பட்டாசு போல வெடிக்க ஆரம்பித்தது. மேலே தொடருவதா வேண்டாமா என்று குழம்பி, என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தொடர, கடவுள் புண்ணியத்தில் முறுக்கு ரொம்பவும் பிகு பண்ணாமல் அழகாக வந்தது!!

தீபாவளியன்று அதிகாலை பட்டாசு வெடிக்க நாங்கள் நால்வரும் செம ஜோராய் ப்ளாட் கீழ் தளம் சென்றோம். ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் இருந்தது எங்களை குஷி படுத்தியது. அனைவருமாக பல்வேறு பட்டாசுகளை வெடித்துத் தள்ளினோம். திடீரென்று ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டுப் பட்டாசு வெடிக்க, அதன் தாக்கத்தில் அருகிலிருந்த கல் என் பெரிய மகனின் கழுத்தைப் பதம் பார்த்தது!! குழந்தை சில வினாடிகளுக்கு பேச்சற்றுப் போனான்! எனக்கும் பகீரென்றது! சில நொடிகளில் அந்த இடமே சிவந்து ரணமாகியது. தண்ணீரில் துடைத்து, பாக்கெட்டில் வைத்திருந்த மருந்தை போட்டோம். ஒரு அரை மணியானதும் தான் அவனுக்கு எரிச்சல் அடங்கியது.

மாலை மீண்டும் பட்டாசு வெடிக்கப் படையெடுப்பு!! யாரோ ஒரு 300 வாலா சரம் வைக்க, அருகிலிருந்த கல், என் வலது கண்ணின் மேல் அழுந்த பட்டதில் குபுகுபுவென்று ரத்தம் கொட்டத் தொடங்கியது! எல்லோருமே பயந்தனர். கண்ணிலா, அல்லது கண் மேலா என்று தெரியவே சிறிது நேரமாகியது! ரத்தம் நிற்க சில நிமிடங்கள் கழிந்தன.

அடாது அடி பட்டும் நாங்கள் அடங்காமல் வெடித்து இந்த தீபாவளியைக் கொண்டாடினோம்!!

Advertisements