குட்டீஸ்களின் சுட்டிப் பேச்சு!!

நேத்திக்கு என் கணவரின் கஸின் சிஸ்டரோட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம்!! அங்கே நடந்த சில சுவாரஸியமான பேச்சுக்கள்!!

குட்டிப் பெண் அனுவிற்கு ஒரே சந்தோஷம், தன் அக்காவிற்கு நிச்சயதார்த்தம் என்று!! அக்காவிடம் போய், “கல்யாணம் எப்போ?” என்று கேட்க, அவள் பதிலுக்கு, “ஜூலை 2011” என்று சொல்ல, குழந்தை உடனே, “அதுக்கு எதுக்கு இப்பவே நிச்சயதார்த்தம் பண்ணனும், ஜூன் 2011ல பண்ணினா போறாதா!” என்று பெரிய மனுஷி போல கேட்க, அங்கே ஒரே சிரிப்பு தான்!!

நிச்சயதார்த்தம் மேடையில் சீர்வரிசை வைத்திருந்தோம்.  நிறைய வகைகளில் பழங்கள், உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வண்ண வண்ண சாக்லேட் என்று மேடையில் காலி இடமே இல்லை என்னும் வண்ணம் அடுக்கப் பட்டிருந்தது.  கார்த்திக் கண்ணில், “பெராரே ரோஷே” என்னும் வெளிநாட்டுச் சாக்லேட் பட்டுவிட்டது. உடனே என்னிடம் வந்து, “அம்மா, நான் அதில் ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கட்டுமா? என்று கெஞ்சியது. நான் அவனிடம், “டேய், இந்த சீர் வரிசையெல்லாம் நாம் மாப்பிள்ளைக்காக வைத்ததுடா!, நாமளே எடுத்துக்க இல்ல” என்றேன். உடனே அவன், “நான் மாப்பிள்ளையா ஆயிட்டேன்னா, எனக்கும் இதெல்லாம் வைப்பாங்களா?” என்கிறான்!!!

இப்பவே கண்ண கட்டுதே!! என் இனிய மருமகளே! மிஞ்சிப் போனா, அவ இப்போ தான் பிறந்து நடை பழகிக் கொண்டிருக்கிறாளோ, அல்லது ஏதோவொரு ஸ்கூலில் ப்ரீ-கேஜி அல்லது எல்-கேஜி படிக்கிறாளோ!!” நீ வரும் நாளை, நானும் என் மகனும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!

Advertisements