சங்கடஹர சதுர்த்தியன்று நான் அடைந்த சங்கடம்!!

நேற்று தான் இந்த வாரத்தின் முதல் வேலை நாள், திங்கட்கிழமை.  காலை, இரு பிள்ளைகளுக்கும் கிரிக்கெட் வகுப்பு இல்லாததால், அவர்கள் துயிலெழுந்ததே 8:30 மணிக்கு தான்.  பிறகு, நாங்கள் மூவரும் கிளம்பி, சென்னை டிராபிக்கில், மாட்டி, மீண்டு, என் பெற்றோர் வீட்டிற்குச் சென்று,  குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைத்து, நான் வேளச்சேரியில் உள்ள என் அலுவலகம் சென்ற போது, காலை மணி, 11க்கு மேலாகிவிட்டது.  பல்வேறு வித அலுவல்களின் காரணத்தால், நான் நேற்று அலுவலகத்திலிருந்து புறப்பட, மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.  நான், வழியிலேயே, என் பெற்றோருக்கு போன் செய்து, குழந்தைகள் இருவரையும், தயார் செய்து வைக்குமாறு கூறினேன்.  என் அம்மா உடனே என்னிடம், “எங்கே அவர்கள் இன்னும் விளையாடி ஓயவில்லை! இருவரும் உள்ளே வந்தவுடன், பூரி கிழங்கு செய்து வைத்திருக்கிறேன், ஊட்டி விட்டு விடுகிறேன்” என்றார்கள்.

நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன், விக்னேஷ், கார்த்திக் இருவரும் தயாராக இருந்தனர்.  என் நாக்கில் சனி, அவர்களிடம் நானே வலிய போய், “டேய்! இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி டா! நாம் சீக்கிரம் வீட்டிற்குப் போனால், நான் இரவு சமையல் வேலைகளை உடனே முடித்துக் கொண்டு, நாம் மூவரும், அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லலாம்” என்றேன்.  என் பெற்றோரின் வீட்டிற்கு மிக அருகில் ஒரு வீட்டில் சிறிய பிள்ளையார் கோயில் ஒன்றுள்ளது. சிறுவர்கள் இருவருமே முன் ஒரு காலத்தில், அந்த பிள்ளையார் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியன்று என் தாய் தந்தையருடன் செல்வார்கள். ஸ்வாமி தரிசனம் செய்து, ஸ்லோகங்கள் கூறினாலும், குழந்தைகள் என்பதற்கேற்ப, பூஜை முடிந்த பிறகு கிடைக்கும் பிரசாதம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அழகிய சிறு தொன்னையில், சுடச்சுட வெண் பொங்கல், கொண்டை கடலை சுண்டல், இரண்டு மூன்று வெல்ல கொழக்கட்டைகள், பால், பஞ்சாம்ருதம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

அதை நினைத்தார்களோ என்னவோ! இருவரும், என் பெற்றோர் இல்லத்திலேயே அன்றிரவு தங்க அடம் செய்தனர். என் கணவரிடம், போன் செய்து, அதைக் கூறிய போது, அவர் அவர்களை எங்கள் வீட்டிற்கே வருமாறு கூறிவிட்டார். முதலில் இருவரும் சமாதானம் ஆகாமல் அடம் பிடித்தனர்.  மணி மாலை ஆறைத் தாண்ட, எனக்கு டென்ஷன் ஏறியது.  நான் அவர்களைப் பார்த்து கத்த, விக்னேஷ் உடனே, “சரி, நாங்கள் உன்னுடன் வர சம்மதிக்கிறோம். ஆனால், ஒரு கண்டிஷன்! நீ உன் வேலைகளை முடித்து, எங்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றும், எங்களுக்கு பிரசாதம் கிடைக்கவில்லை என்றால், நீ எங்களுக்கு, கோயிலில் கிடைக்கும் பிரசாதம் அனைத்தையும் செய்து, ராத்திரியே தர வேண்டும்” என்றான். கார்த்திக்கிற்கும் அந்த யோஜனை மிகவும் பிடித்துப் போக, அவனும் அண்ணனுடன் சேர்ந்து சிந்து பாடினான்.

அப்போதைக்கு, அவர்களை, அங்கிருந்து கிளப்ப, நான் சரியென்று ஒப்புக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம்.  எங்கள் வீடு போய் சேரும் போது மணி, இரவு 7:15.  நல்ல வேளையாக, என் மாமியார், ரசமும்,  கீரை தாலும் செய்திருந்தார்கள். நான் அவசரம் அவசரமாக குக்கர் வைத்து, சாதம், குழந்தைகளுக்கு பருப்பு, பீன்ஸ் பொரியல் என்று முடிக்கும் போதே மணி 7:50. மூவரும், காரில் ஏறிக் கொண்டு, எப்போதும் போகும் சுப்ரமண்ய ஸ்வாமி கோயிலுக்குச் சென்றோம். என் போறாத வேளை, கோயில் திறந்திருந்ததே தவிர பிரசாதம் வினியோகம் முடிந்திருந்தது.

உடனே விடு ஜூட் அடுத்த கோயிலுக்கு! நவசக்தி விநாயகர் கோயில்! வழி முழுக்க நான் ஒரே பிரார்த்தனை, இந்த கோயிலிலாவது பிரசாதம் கிடைக்க வேண்டும் என்று. சிறுவர்களுக்கோ முகத்திலேயே தெரிந்தது குஷி! அவர்கள் தான் வெல்வார்கள் என்று.  நான் இரவு படப் போகும் பாட்டை நினைத்து!

நல்ல வேளையாய், நவசக்தி விநாயகர் என் நெஞ்சில் பாலை வார்க்கும் விதமாய், புளியோதரை ரூபத்தில் பிரசாதமாய்க் காட்சியளித்தார். அதை வாங்கி நன்றாக ருசித்து உண்டனர்.  முடித்தவுடன், இருவரும் என்னிடம், “நமக்கு வழக்கமாய்க் கிடைக்கும் பிரசாதம் எதுவுமே இன்று கிடைக்கவில்லை! எனவே, நீ வீட்டிற்கு வந்தவுடன், நம் டீல் படி எங்களுக்கு நாங்கள் கேட்டது அத்தனையும் செய்து தர வேண்டும்” என்றனர்.  எப்படியோ சமாளித்து, இன்று செய்து தருவதாய் வாக்களித்திருக்கிறேன்!!!

சங்கடம் இன்னும் தீரவில்லை!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s