மறக்கவில்லை “எதிரொலி” நிகழ்ச்சி!!

நேற்று முன் தினம், என் சக ஊழியர்களுடன் ஒரு காட்சியை ஒளிப்பதிவு செய்ய, 4 பேச்சாளர்களும், 3 ஒளிப்பதிவாளர்களும் ஓர் அறையில் கூடினோம்.  வட்ட வடிவிலான மேசையில் நாங்கள் மூவரும் அமர, காட்சியின் இயக்குனர், எங்களிடம், காட்சியைப் பற்றி விளக்கம் கூறும் போது, “அந்த நாட்களில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வருமே, ஒருவர் வாசகர் கேள்விகளைக் கேட்க, மற்றொருவர் விடையளிக்கின்றார் போல” என்றார்.  அந்த நிகழ்ச்சி நாங்களனைவரும், பல முறை கண்டுகளித்த நிகழ்ச்சி என்றாலும், நிகழ்ச்சியின் பெயர் சட்டென்று வாயில் வர மறுத்தது.  உடனே ஒருவர், “எதிரொலி” நிகழ்ச்சி என்று கூறியதும், மனம், அந்த நாட்களில், கண்ட ஒரே சானல் மற்றும் அதில் கண்ட நிகழ்ச்சிகளான எதிரொலி”, “ஒளியும் ஒலியும்”, மேலும் பல நல்ல கருத்துள்ள புதினங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அது ஒரு கனாக் காலம் தான்!!

Advertisements

காசைக் கரியாக்குவது எப்படி??

கடந்த சில வருடங்களாகவே, என் இரு பிள்ளைகளுக்கும் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க, நானும் என் கணவரும் சேர்ந்து, ஒரு உண்டியலைப் பரிசளித்தோம்.  இரு குழந்தைகளும், ஜாலிக்காகத் தொடங்கி, பின்பு, நிஜமாகவே நன்றாகச் சேர்க்கத் தொடங்கினர்.  சில நூறு தேறும் என்றானதும், அந்த சில்லரைக் காசுகளை எண்ணி, நாங்கள் அவர்களுக்கு ஏதேனும் அவர்கள் வெகு நாட்களாய் எதிர்பார்த்த பொருளை வாங்கிக் கொடுக்கும் பழக்கம் உண்டானது.

ஜூன் மாதம்  பள்ளி தொடங்கிய சில நாட்களிலேயே, கார்த்திக்கின் பிறந்த நாள் அமைந்தது.  பல பேர் பல நூறுகளைப் பரிசாக அளித்ததால், அவர்கள் உண்டியலில் முதன் முறையாக 1,000 ரூபாய் சேர்ந்தது.  அதைக் கண்டவுடன், மேலும் குஷியாகி, இன்னும் தீவிரமாய் சேர்த்தனர்.  கார் டேஷ்போர்டில் , காய்கறிக் கடையில், மளிகைக் கடையில், என்று ஒரு இடம் மிச்சம் வைக்காமல், எங்கு சில்லரையப் பார்த்தாலும், அள்ளி உண்டியலில் போடும் வண்ணம் இருந்தனர்.  அதில் வேறு, சின்னவன் கார்த்திக், தன் அண்ணனிடம், “டேய் அண்ணா, அம்மா நம்ம கிட்ட பைசா கேட்டா என்னடா பன்றது??”, அதற்கு, விக்னேஷ், “ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் டா, நீ வேறு எதுவும் உளறாதே” என்றான்.

அடிக்கடி வீட்டிலுள்ளவர்களிடம், “நாங்கள் காசைச் சேர்த்து பின் கரியாக்கப் போகிறோம்” என்றே கூறி வந்தனர்.  போன ஞாயிறன்று என் கணவர் குழந்தைகளிடம், “தீபாவளிக்கு பட்டாசு, 1000 ரூபாய்க்கு வாங்கலாமாடா?” என்றவுடன், இருவரும் கோரஸாக “மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்பா” என்றனர்.  “என்னது, மூவாயிரம் ரூபாய்க்கும் பட்டாசா??” என்று நான் கேட்டதும், “அப்பா 1000 ரூபாய், பாட்டி தாத்தா 1000 ரூபாய், அப்பறம்ம்ம்ம்ம்” என்று இழுத்ததும், நான் அலறிக் கொண்டே, “என்னிடம் வேறு 1000 ரூபாய் கேட்காதீர்கள்” என்றதும், அவர்கள், “அய்யோ அம்மா, நாங்கள தான் கரியாக்க என்றே காசு சேமித்துள்ளோமே” என்றனர். “காசு கொடுத்து பட்டாசு வாங்கினாலும் அது கரியாகத்தானே போகப் போகிறது” என்று ஒரு பிட் வேறு போட்டான் விக்னேஷ். இதற்கு என்னங்கோ பதில் சொல்வது???

பச்சை பேன்ட், மஞ்சள் பாவாடை, ஒரு காலத்தில் எங்கள் தீபாவளி!!

கடந்த இரு வாரங்களாக என் இரு குழந்தைகளும், தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், தங்களுக்கு என்ன உடை வேண்டும் என்று அலசிக் கொண்டிருக்கின்றனர்.  “ஜீன்ஸ், கார்கோ, பெர்முடாஸ்” என்றெல்லாம் கூறிக்கொன்டிருக்கின்றனர்.  நான், சிறுவயதில் எங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவங்களை சற்றே அசைப்போடுகிறேன். என் தந்தை, ஒரு துணிக்கடையில் பகுதி நேர வேலையாக, கணக்கு எழுதிக் கொண்டிருந்தார்.  மேற்குத் தாம்பரத்தில், அந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த துணிக்கடை அது. எங்கள் வீட்டில், நாங்கள் cousins மொத்தம் கிட்டத்தட்ட ஏழெட்டு பேருக்கு மேல் இருந்தோம்.   தீபாவளிக்கு சில நாட்கள் இருக்கும்போதே, என் அப்பா, ஆண் பசங்களுக்கு ஒரே கலரில் பேன்ட் துணி, மற்றும் சர்ட் துணி, மற்றும் பெண் குழந்தைகளுக்கு, ஒரே கலரில் சில மீட்டர் துணியும் வாங்கி, அவருக்கென்றே உள்ள ஒரு டெய்லரிடம் கொடுத்து, பையஙளுக்கு, பேன்ட்சர்ட், அவரவர் அளவிலும், பெண் குழந்தைகளுக்கு, ஒரே துணியில், ஒருவருக்கு, முழு நீளப் பாவாடை, இன்னொருவருக்கு குட்டை பாவாடை, எனக்கும், என் இளைய தங்கைக்கும், ப்ராக், என தைத்துக் கொண்டு வந்துவிடுவார்.  பலரும் கேலி செய்யும் வண்ணம், தீபாவளியன்று, நாங்கள் எல்லாரும், பள்ளிச் சீருடை போல, ஒரே துணியில் உடையணிந்து இருப்போம். நினைத்துப் பார்க்கவே சிரிப்பாயிருக்கிறது. இன்றென்னவென்றால்,!!! நிலைமை தலைகீழ்.!! அதிலும் என் சின்ன மகனை திருப்தி செய்துவிடலாம்.  ஆனால், பெரியவன், ரொம்ப ஆடைஅலங்காரத்தில், ஆசை கொண்டவன்.  அவனை அந்த காலத்தில் நாங்கள் பட்டது போல, விதவிதமாய், கலர் கலராய், பச்சை, சிவப்பு, போன்ற “ராமராஜன்” கலர்களில் பேன்ட் போடச் செய்யவேண்டும்!!!.

ஆணா, பெண்ணா!!பிறந்திருக்கு, இதுதான் இங்கு முதல் கேள்வி??

என்னுடன் வேலை செய்யும் இரு பெண்களுக்கு இந்த வாரம் பேறுகாலம்.  இருவருக்குமே இது இரண்டாவது பிரசவம், இருவருக்குமே முதல் குழந்தை ஆண்குழந்தை தான். முக்கால்வாசி மகளிருக்கு இருக்கும் அடிமனது ஆசை போல இவர்களுக்கும், இரண்டாவது குழந்தையாவது பெண் குழந்தையாக பிறக்கவேண்டும் என்ற ஆசை. அதிலும் ஒருவர், பல புள்ளியியல் விவரங்களைச் சேகரித்து, முதலில் ஆண்குழந்தை பெற்றெடுத்த பலருக்கும், இரண்டாவதும் ஆணாகவே அமைந்ததாகவும் (நான் உட்பட) , முதலில் பெண்குழந்தை பெற்றெடுத்த பலருக்கும், இரண்டாவதும் பெண்ணாகவே அமைந்ததாகவும், மிகச் சிலருக்கே ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் அமைந்ததாகவும், தன் வலைப்பதிவில் எழுதியிருந்தார்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம், நான் என் இரண்டாவது குழந்தை பிறக்கும் முன், பெண்குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த கதையைச் சொன்னேன்.  ஆனால் அவரோ, சற்றும் சளைக்காமல், பெண்குழந்தை பிறக்கும்வரை ஒரு கைப் பார்ப்பது என்ற முடிவுடன் இருந்தார்.

செப்டம்பர் 30 அன்று, பேறுகாலமாய் இருந்த ஒருவருக்கு, சுகப் பிரசவமாகி, ஆண் குழந்தை பிறந்தது. புள்ளியியல் விவரங்களைச் சேகரித்தவருக்கு, வயிற்றில் புளியைக் கரைத்ததோ என்னவோ, எனக்கு அப்படித் தான் இருந்தது.  தினமும், அவரிடமோ, அவர் தோழியிடமோ, குழந்தை பிறந்துவிட்டதா? என்று வினவிய வண்ணம் இருந்தேன்.

இன்று காலை அந்த இனிய செய்தி என் காதிற்கு எட்டியது. “பெண் குழந்தை பிறந்துள்ளது” என்பதே அச்செய்தி.  ஆஹா, அவள் ஒரு பாக்கியசாலி!!!

தக்காளிக்காய் துவையல்

எனக்கு கல்யாணமாகி, பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. சுமாராய் சமைத்துக் கொண்டிருந்ததிலிருந்து இப்போது, நாலு(40 அல்லது 400 என்று படிக்கவும்)பேர் பாராட்டும் அளவிற்கு சமைக்கின்றேன் என்றால், எங்கள் குடும்பத்தினரின் அளவிலா சாப்பாட்டு மோகம் என்றே கூறவேண்டும்.  குறிப்பாக என் கணவருக்கு, புதிது புதிதாய், உணவு வகைகளைச் சுவைப்பது மிகவும் பிடிக்கும்.

சில நாட்களாக காய்கறி கடையில், சிறிது உருண்டையாய் பச்சையாய் ஒன்று தக்காளியளவில் கண்ணில் பட, கடைக்காரரிடம் வினவியதில், அது தக்காளிக்காய் என்று தெரிந்தது.  கால் கிலோ தக்காளிக்காய் கொடுக்குமாறு கேட்டு வாங்கிவந்தேன்.

துவையல் செய்முறை:

தக்காளிக்காயை தண்ணீரில் சுத்தம் செய்து, பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.  அடுப்பு மூட்டி வானலியில் சிறிது எண்ணெய் வைத்து, அது காய்ந்த பின், 4 அல்லது 5 வற்றல் மிளகாய், 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, சிறிதளவு கடலைப் பருப்பு, பெருங்காயம் சிறிதளவு, மிளகு பிடிக்குமென்றால், 2 அல்லது 3 மிளகு ஆகியவற்றை சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். மேலும் எண்ணெய் விட்டு, தக்காளிக்காயை வதக்கிக் கொள்ளவும்.

இவையனைத்தும் சற்று சூடாறிய பின், அம்மியிலோ, அல்லது மிக்ஸியிலோ கொஞ்சம் புளி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து, துவையல் பதத்தில் அரைத்தால், தக்காளிக்காய் துவையல் ரெடி.  சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, அல்லது இட்லி, தோசையுடன் உண்ண ஏற்ற ஒன்று.

பச்சை மிளகாய் ஸ்வீட்டாதான் இருக்கும்,எங்க பாட்டி சொல்லியிருக்கா!!

இச்சம்பவம் விக்னேஷ் சிறு குழந்தையாய் இருக்கும்போது நடந்தது.  நான் SRM Engineering College சேர்ந்திருந்த சமயம் அது.  விக்னேஷ்க்கு ஒன்றரை வயது இருந்திருக்கும்.  மாலையில் நான் அலுவலகத்தில்லிருந்து சானடோரியத்தில் இருந்த என் பெற்றோர் வீட்டிற்குச் சென்று, விக்னேஷை அழைத்துக் கொண்டு ரயிலேறி, சைதாப்பேட்டையில் இருந்த எங்கள் இல்லத்திற்கு வருவேன்.  வந்த பிறகு, என் மாமியாரிடம், குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி, இரவு சமையல் வேலைகளை செய்து விடுவேன்.  ஒரு நாள், விக்னேஷ் கையில் பச்சைமிளகாய் மாட்டிவிட, அவன் பாட்டியும் விளையாட்டாய், “பச்சைமிளகாய் ஸ்வீட்டா இருக்கும்” என்று கூறினார். அவனும் அதை உண்மையென நம்பினான். நான் அவனிடம், “பச்சைமிளகாய் தொட்டா கண் எரியும்” என்று கூறி, அவன் கையிலிருந்து, வாங்கி வைத்தேன்.  ஆனால், விக்னேஷ் அவன் தந்தை அலுவலகத்திருந்து வந்தவுடனேயே அவரிடம், “அப்பா, பச்சைமிளகாய் எப்படி இருக்கும்?” என்று வினவ, அவரும், “காரமாய் இருக்கும்” என்றார்.  ஆனால், அவனோ, “பச்சை மிளகாய் ஸ்வீட்டாதான் இருக்கும்,எங்க பாட்டி சொல்லியிருக்கா!!” என்றானே பார்க்கலாம்!!

Car parking space or Cow Shed??

This incident happened when Karthik was in his LKG.(2006-2007) He was 4 years old then.

Karthik has an yearning about bringing up pet animals.  He used to keep on nagging me that we should keep either a dog, or a cat or at least a parrot in our house.  I used to keep on telling him back whenever he asks this question that  “It’s very tough for me to take care of both of you.  I cannot offer to take care of one more.”  He would promptly reply, “Let’s have a maid separately for the pet or else I can myself take care of it.”  Two days back, he suddenly asked, when he came back from school, “Amma, from where do we get the milk  we drink?”.  I really took pity on him, as well as cursed myself for leading a monotonous city life which had made the children not know even the few basic things like these.  Yesterday, being a Sunday, I took him to a milkman’s house whom I have been knowing for the past few years and asked him to show to my children a few cows, its young ones and also the scene of milking the cow.  Way back to home, Karthik said, “Amma, I know you are afraid of dogs and cats.  But, cow is harmless.  Why don’t you agree to have cow as our pet animal?  Then, I will not nag you to come and play with me.  I will play with the calf.”  I replied, “Karthik, we are living in a residential complex.  The association will not permit us to keep cows etc. within our premises.”.  He immediately replied, “We can keep our car outside the house, near the compound wall.  If we keep our cow within our car parking area, then nobody can question us”.  I am tongue-tied to give him a suitable answer.